சென்னையில் பெட்ரோல் திருட்டு அதிகரிப்பு; வாகன ஓட்டிகளே உஷார்


சென்னையில் பெட்ரோல் திருட்டு அதிகரிப்பு; வாகன ஓட்டிகளே உஷார்
x
தினத்தந்தி 5 July 2021 10:54 PM GMT (Updated: 5 July 2021 10:54 PM GMT)

100 ரூபாயை கடந்து செல்வதால் சென்னையில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கி உள்ளன.

வெந்த புண்ணில்...
பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் போன்றவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை தினமும் பைசா அளவில் உயர்ந்து, தற்போது லிட்டர் 100 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமும், வேதனையும் அடைந்துள்ள நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று சென்னையில் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அரங்கேற தொடங்கி உள்ளன. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து பெட்ரோல் திருடர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

கேமராவில் சிக்கிய வாலிபர்
இந்தநிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் காலியாகி இருந்தது. சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், குடியிருப்பு வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், அதிகாலை 3 மணியளவில் வாலிபர் ஒருவர் குடியிருப்பு வளாகத்தில் புகுந்து, ஒவ்வொரு வாகனத்திலும் பெட்ரோல் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஆனால் இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. பெட்ரோல் திருட்டுக்காக போலீசில் புகார் அளிக்க பலரும் தயங்குவது, பெட்ரோல் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே போலீசார் தாமாக முன்வந்து இரவு ரோந்தை தீவிரப்படுத்தி பெட்ரோல் திருடர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் 
எதிர்பார்ப்பாக உள்ளது.

உஷார்
பெட்ரோல் திருடப்பட்டது தெரியாமல் வாகனங்களை எடுத்து செல்வோர்கள், நடுவழியில் வண்டி நின்று பரிதவிக்கும் சூழலையும், பெட்ரோல் நிலையத்தை தேடி வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்லும் நிலைமையும் ஏற்படுகிறது. ‘நேற்று தானே 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டோம். அதற்குள் 2 லிட்டர் தீர்ந்துவிட்டதே..., வண்டி மைலேஜ் தரவில்லையா?... என்ற மனக்குழப்பத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் வீட்டில் இருந்து வெளியே புறப்படும்போது வாகனத்தில் பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது? என்பதை காட்டும் கருவியை பார்க்க வேண்டும். அந்த கருவி வேலை செய்யவில்லை என்றால், வாகனத்தின் பெட்ரோல் டேங்கை திறந்து எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டிலும் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.

Next Story