ரூ.133 கோடி கொரோனா நிவாரண உதவி மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு எப்படி வழங்கப்பட்டது? சென்னை ஐகோர்ட்டு கேள்வி


ரூ.133 கோடி கொரோனா நிவாரண உதவி மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு எப்படி வழங்கப்பட்டது? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 July 2021 7:37 AM GMT (Updated: 8 July 2021 7:37 AM GMT)

கொரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடி எப்படி வழங்கப்பட்டது என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.




சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால், பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.  அவர்களில் கொரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.133 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கண்பார்வையற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், கண்பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கண்பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், மீத தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதனையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் மீதமுள்ள ரூ.73 கோடி நிலை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரூ.133 கோடி நிவாரண தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.


Next Story