மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்


மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
x
தினத்தந்தி 8 July 2021 11:25 AM GMT (Updated: 8 July 2021 11:25 AM GMT)

மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு தமிழகம் வறண்ட பூமியாக மாறும் நிலை ஏற்படும், என்று விஜயகாந்த் கூறி உள்ளார். தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

Next Story