மேகதாது அணை பிரச்சினை: நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு


மேகதாது அணை பிரச்சினை: நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு
x
தினத்தந்தி 11 July 2021 3:27 AM GMT (Updated: 11 July 2021 3:27 AM GMT)

மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும். எனவே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும், கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் முனைப்பு காட்டி வருகிறது. 

இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை (திங்கட்கிழமை) சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே, பெரும்பாலான கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

என்றாலும், தற்போதைய சூழ்நிலையில், சட்டப்போராட்டம் நடத்தியே மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுக்க முடியும் என்று தெரிகிறது. எனவே, எந்த வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.

சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. மேலும், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

Next Story