மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 12:00 PM GMT (Updated: 10 Aug 2021 12:00 PM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் நேற்று 17 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 3,046 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 7,491 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து மொத்தம் 14,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று அணை நீர்மட்டம் 74.3 அடியாக உள்ளது. 

Next Story