தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்


தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:15 PM GMT (Updated: 23 Aug 2021 11:15 PM GMT)

தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 2½ மணி நேரம் கடைகள் அடைத்து நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

தங்க நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்யவேண்டும் என இந்திய தரநிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது. இந்த புதிய அறிவிப்புக்கு தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரையிலான 2½ மணிநேரம் நேற்று கடைகளை அடைத்து நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடைக்கப்பட்ட கடைகள் முன்பு நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் ‘தனி ஹால்மார்க் அடையாள எண் வேண்டாம்’ என்று வார்த்தைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

நகைக்கடைகள் அடைப்பு

அந்தவகையில் சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கடைவீதிகள் நிறைந்த பகுதிகளில் உள்ள லலிதா ஜீவல்லரி, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் போன்ற முன்னணி நகைக்கடைகள் உள்பட பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன.

சென்னை சவுகார்ப்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் மெட்ராஸ் வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானி தலைமையில் நகைக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் பதாகைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து ஜெயந்திலால் ஷலானி நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டங்கள்

தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை அவசியமே. ஆனால் நகையின் தரத்தை பார்க்காமல், இந்த நகை தயாரிக்கப்பட்ட இடம், விற்பனையாளர் விவரம் உள்ளிட்டவற்றை அறிய தனி அடையாள எண் கொண்டுவரப்படுவது தேவையில்லாதது. நகைகளில் இந்த எண் இடம்பெற்றுவிட்டால், அதை அழிக்கவே முடியாது. இதனால் ஒரு ஆபரணத்தில் இருந்து மாற்று நகைகள் உருவாக்கப்பட முடியாது. இதனால் நகைகளை மறு அடகு வைக்கவோ, மாற்றி சீரமைப்பதோ முடியாமல் போய்விடும். இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனாலேயே இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story