விண்ணப்ப பதிவு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் சேர 1¾ லட்சம் பேர் விண்ணப்பம்


விண்ணப்ப பதிவு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் சேர 1¾ லட்சம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:20 PM GMT (Updated: 24 Aug 2021 11:20 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். கடந்த ஆண்டைவிட 13 ஆயிரம் பேர் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் வாரத்திலேயே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

இந்த ஆர்வம், விண்ணப்ப பதிவு செய்வதற்கான இறுதி நாளான நேற்று வரையிலும் குறையாமலேயே காணப்பட்டது. அந்தவகையில் நேற்று மாலை நேர தகவல்படி, நடப்பாண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர்.

இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து முழுமையாக விண்ணப்ப பதிவை பூர்த்தி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு 12 மணி வரை அவகாசம் இருந்ததால், இந்த புள்ளிவிவரங்களில் சற்று மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கடந்த ஆண்டைவிட அதிகம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டைவிட அதிகமாக 13 ஆயிரத்து 337 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் போன்ற விண்ணப்ப பதிவு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்தால்தான் சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story