சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே வாக்குவாதம்


சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 2 Sep 2021 10:07 PM GMT (Updated: 2 Sep 2021 10:07 PM GMT)

நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க., காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை,

சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் கோவிந்தசாமி (பாப்பிரெட்டிபட்டி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

கோவிந்தசாமி (அ.தி. மு.க.):- தமிழக கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேரும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். ஆனால் கொள்கை விளக்க குறிப்பில் அவர் பெயரை குறிப்பிடாமல் குழு பரிந்துரை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது?.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தான் நீட் தேர்வு வந்தது அதையும் பதிவு செய்யவில்லை, அதையும் சேர்த்துக்கொள்ளலாமா?

கோவிந்தசாமி:- காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் இருந்தபோது நீட் கொண்டு வரப்பட்டது.

மா.சுப்பிரமணியன்:- நாங்கள்தான் அதை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லையே. நாங்கள் இருக்கும் வரை நீட் தமிழகத்திற்குள் நுழையவில்லை.

வாக்குவாதம்

கோவிந்தசாமி:- மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி....

(இந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.)

சபாநாயகர்:- உறுப்பினர் விஜயதரணி உட்காருங்கள், உறுப்பினர் பேசி முடித்த பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்.

இருப்பினும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். யாருக்கும் மைக் வழங்கப்படாததால் சலசலப்பாக இருந்தது.

விஜயதரணி:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது எந்த மாநிலத்திற்கு உகந்ததாக இருக்கிறதோ அவர்கள் கொண்டு வரலாம் என்று தான் கேட்டுக்கொள்ளப்பட்டது. நாங்கள் திணிக்கவில்லை.

எங்கே இருக்கிறது எய்ம்ஸ்?

கோவிந்தசாமி (அ.தி.மு.க.):- நாங்கள் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வந்தோம்.

மா.சுப்பிரமணியன்:- இதை சொல்வதற்கு நீங்கள் கூச்சப்பட வேண்டும். அங்கே என்ன இருக்கிறது? இல்லாத எய்ம்ஸ் பற்றி ஏன் பேசுகிறீர்கள். மத்திய அரசு அறிவித்துள்ள மாநிலங்களில் கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இங்கே ஒன்றும் நடக்கவில்லை. ஒரு செங்கல் மட்டும் தான் இருந்தது. இப்போது நாங்கள் வந்தபிறகு தான் ஆய்வு குழுவே வந்துள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story