விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்


விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2021 9:17 PM GMT (Updated: 3 Sep 2021 9:17 PM GMT)

விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று வனத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பதில் அளித்து பேசியதாவது:-

நடவடிக்கை

தமிழ்நாட்டின் புவியியல் பரப்பான 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோ மீட்டரில், பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி 23 ஆயிரத்து 188 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது 17.83 சதவீதம் ஆகும். வனப்பரப்பு 26 ஆயிரத்து 364 சதுர கிலோ மீட்டரும், மரப்பரப்பு 4,830 சதுர கிலோ மீட்டரும் என மொத்த வன மற்றும் மரப்பரப்பு 31,194 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது புவியியல் பரப்பில் 23.98 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் வன மற்றும் மரப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையினை செயல்படுத்துவதற்கு வரும் ஆண்டுகளில் பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மனித வன விலங்கு மோதல்களால் பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள் பாதிக்கப்படுவது காட்டுப் பன்றிகளால்தான். இதற்கு தீர்வு காணும் வகையில், காட்டுப் பன்றியை ‘வெர்மின்' (விவசாயிகளுக்கு தீங்குவிளைவிக்கும் விலங்குகளை கொல்ல அனுமதி) வகையாக மாற்றம் செய்து அவசியப்படுகின்ற காலத்திலும், அவசியமான மாவட்டத்திலும் அரசு சட்ட விதிகளுக்குட்பட்டு, வனத்துறை அதிகாரிகள் மூலம் சுடுவதற்கு அல்லது விவசாயிகளின் கோரிக்கையின்படி விவசாய நிலத்திலேயே காட்டு பன்றிகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், வனத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

அகத்தியர்மலையில்யானைகள் காப்பகம்

வன விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென,3 உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோவை, திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். தற்போதுள்ள வனத் துறையின் தேவைகள் மற்றும் சிறந்த மேலாண்மைக்கு என தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கைகள் மின்னணுமயமாக்கப்படும்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டில் தென்மாவட்ட யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருட்டு அகத்தியர்மலை யானைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும்.

மோப்ப நாய் பிரிவு

தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, கடற்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும். வனத்துறையின் வனப் பாதுகாப்பு மற்றும் வனக் குற்றங்களை எளிதில் கண்டறிய மோப்ப நாய் பிரிவுகள் ஒவ்வொரு வன மண்டலத்திற்கும் ஏற்படுத்தப்படும்.

மாநிலத்தில் கடல்வாழ் விலங்கு வேட்டை தடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் வன உயிரினக் குற்றங்களுக்கு என சிறப்பு கடல்சார் உயர் இலக்குப் படை ஒன்று உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் காணப்படும் அந்நிய களைத் தாவரங்களை அகற்றுவது மற்றும் அவ்வாறு அகற்றப்பட்ட வனப்பகுதிகளை நல்ல வளமைக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த அரசு தனிக் கொள்கை ஒன்றை வகுக்கும்.

திருத்தப்பட்ட ஊதியம்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் தற்போது பணிபுரிந்து வரும் 212 பணியாளர்களுக்கு நீண்டநாள் கோரிக்கையாக உள்ள திருத்தப்பட்ட ஊதியம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story