நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவிப்பு


நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு கார் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 10:01 PM GMT (Updated: 2021-09-11T03:31:10+05:30)

நஷ்டம் காரணமாக 2 தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 44 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு' கடந்த 1995-ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது. இந்த நிறுவனத்துக்கு, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ‘போர்டு' நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.

இந்தியாவில் வாகன உற்பத்திக்காக ‘போர்டு' நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டத்தால் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக ‘போர்டு' நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. இது ‘போர்டு' நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பேரிடியை கொடுப்பதாக அமைந்துள்ளது.

44 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்

சானந்த் தொழிற்சாலையை நடப்பாண்டு 4-ம் காலாண்டிலும், மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு 2-ம் காலாண்டிலும் மூடுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்களாக உள்ள சுமார் 4 ஆயிரம் பேரும், அந்த நிறுவனத்தை சார்ந்து இருக்கும் 40 ஆயிரம் பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை மூடும் முடிவினால் ஏற்படும் விளைவுகளை தணிப்பதற்கு, மறைமலைநகர் மற்றும் சானந்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்கள், சங்கங்கள், சப்ளையர்கள், டீலர்கள், அரசு மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து நியாயமான மற்றும் சமநிலையான திட்டத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுவதாக ‘போர்டு' நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.200 கோடி நஷ்டம்

தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் டீலர்ஷிப்புகள், சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், வாகன இயக்கங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்றும் ‘போர்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘போர்டு' நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டும் ரூ.200 கோடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளை மூடுவது ஏன்?

இதுகுறித்து ‘போர்டு' இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைவருமான அனுராக் மெக்ரோத்ரா கூறுகையில், “தொழிற்சாலைகளை மூடுவது என்பது கடினமான முடிவுதான். எங்களுக்கு இதை தவிர வேறு முடிவு தெரியவில்லை. பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்டகாலத்துக்கு லாபம் ஈட்டும் பாதையை எங்களால் அடைய முடியவில்லை. நாங்கள் முயற்சித்து ஆராய்ந்து எங்களுடைய பங்குதாரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தொடர்ந்து உகந்த வருமானத்தை அளிப்போம்” என்றார்.

3-வது நிறுவனம்

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் விங்கேஷ் குலாட்டி கூறும்போது, “சில்லரை மற்றும் சேவை உள்கட்டமைப்புக்காக ‘போர்டு' டீலர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். உற்பத்தியை நிறுத்துவதாக போர்ட் நிறுவனம் அறிவித்ததால், அதனை சார்ந்து இருக்கும் டீலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்” என்றார்.

இந்தியாவில் செயல்பட்டு வந்த ‘ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதமும், ‘ஹார்லி டேவிட்சன்' நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்தது. அந்தவகையில், தற்போது 3-வதாக ‘போர்டு' நிறுவனமும் தொழிற்சாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story