என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது


என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 15 Sep 2021 11:53 PM GMT (Updated: 15 Sep 2021 11:53 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு நடந்தது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரின் விண்ணப்பங்கள் தகுதியுடையவையாக கருதப்பட்டன. அதன்படி, தகுதியுடையவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு நேற்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்து இருந்தார். கலந்தாய்வை பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அதற்கு விண்ணப்பித்து இருந்த முன்னாள் ராணுவவீரர்களின் பிள்ளைகள், விளையாட்டுப்பிரிவு மாணவர்கள் என மொத்தம் 72 பேரை அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு சேவை மையத்துக்கு அழைத்து, அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்பட கலந்தாய்வுக்கான பணிகளை கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டது.

சிறப்பு சேவை மையம் மூலம் கலந்தாய்வு

அதேபோல், பிற்பகலில் அரசு பள்ளி மாணவர்களில் பொதுப்பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் முதல் 20 இடத்தை பிடித்தவர்களையும் சிறப்பு சேவை மையத்துக்கு வரவழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்வு செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த 20 மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்தது குறித்து அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, நாளைமறுதினம் (சனிக்கிழமை) 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை முதல்-அமைச்சர் வழங்க இருப்பதால், அதற்காக 20 மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு சிறப்பு சேவை மையம் மூலமாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

புகார்

வழக்கமாக ஆன்லைன் கலந்தாய்வு தேதி அறிவித்தவுடனே, கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்துவது, விருப்ப இடங்களை தேர்வு செய்வது, இட ஒதுக்கீடு ஆணை வழங்குவது எப்போது என்பது குறித்த அட்டவணை வெளியிடப்படும். ஆனால் இந்த முறை அப்படி வெளியிடப்படவில்லை. அதற்கான அட்டவணை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தகுதியுள்ள சில மாணவ-மாணவிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற புகாரும் தற்போது எழுந்திருக்கிறது.

Next Story