மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்


மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:13 AM GMT (Updated: 20 Sep 2021 12:13 AM GMT)

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்துகின்றன. வீட்டின் முன்பு நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி நிற்கிறார்கள்.

சென்னை, 

கடந்த மாதம் 20-ந்தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது குறித்தும், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) முதல் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடக்க இருக்கிறது.

அதன்படி, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்த உள்ளனர். 

Next Story