தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 23 Sep 2021 9:59 PM GMT (Updated: 23 Sep 2021 9:59 PM GMT)

தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியின் புராதன சின்னமாக ஆனைப்புலி பெருக்கா எனும் மரம் இருக்கிறது. இந்த மரம் ஆப்பிரிக்காவில் இருக்கக்கூடியது. 500 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. இம்மரத்தின் சிறப்புகளை, வரலாற்றின் குறிப்பேட்டை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் கிராமங்கள் மற்றும் மலைவாழ் கிராமங்களுக்கு சென்று நர்சுகள் பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவமும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாளை(இன்று) ஒரு புதிய முயற்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தலைமை ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் யாரெல்லாம் 18 வயதிற்கு மேற்பட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வருகிற 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறிதல் போன்ற பல பரிசோதனைகள் செய்கிற மையத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் ஒரு கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.

3-வது முகாம்

கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினால் இன்று(நேற்று) காலை 7 மணி வரை 9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பயனடைந்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, திருச்சி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி ஆகிய மூன்று ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றிற்கான இ.என்.டி. மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

கடந்த 12, 19-ந்தேதிகளில் 2 மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நேற்று முன்தினம் 5 லட்சமும், நேற்று 14 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்தத் தடுப்பூசிகளை வைத்து வரும் 26-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலால் கடந்த 2020-ம் ஆண்டில் 2,410 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். டெங்குவிற்கான பரிசோதனைகள் என்பது 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அளவிற்கு 76 ஆயிரம் பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 2,733 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story