மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை


மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
தினத்தந்தி 23 Sep 2021 10:49 PM GMT (Updated: 23 Sep 2021 10:49 PM GMT)

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியாவிலேயே 2-வது இடத்தை பிடித்து சிறந்து விளங்குகிறது. தலைசிறந்த அதிகாரிகள் இதன் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். 2019-ம் ஆண்டு முதல் வெங்கடாச்சலம் இதன் தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார். உயிரியல் பிரிவில் எம்.எஸ்.சி. பட்ட மேற்படிப்பு படித்த வெங்கடாச்சலம், சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்) அதிகாரியாக தேர்ச்சி பெற்று 1983-ம் ஆண்டு தமிழக வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் அமெரிக்காவிலும் படித்துள்ளார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

தடை இல்லா சான்றிதழ்

வனத்துறை பணியில் இருந்து 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆன பிறகுதான் இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு அவசர, அவசரமாக தடை இல்லா சான்று வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார். அவரது வீட்டில் நடந்த சோதனை நேற்று மாலையிலும் நீடித்தது.

Next Story