கொரோனா 3-வது அலை பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்


கொரோனா 3-வது அலை பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 25 Sep 2021 4:47 PM GMT (Updated: 25 Sep 2021 4:47 PM GMT)

பண்டிகை காலம் என்பதால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என்றும், கொரோனா 3-வது அலை பரவாமல் இருப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா 3-வது அலை
இறங்கு முகமாகவே இருந்து கொண்டிருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 1-ந் தேதி அன்று 1,509 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், 23-09-2021 நிலவரப்படி, 1,745 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 நாட்களில் 236 ஆக உயர்ந்துள்ளது.இது இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 5.5 சதவீதத்திற்கும் மேல். அதேபோல், 1-ந் தேதியன்று 20 ஆக இருந்த உயிரிழப்பு 23-9-2021 அன்று 27 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு அச்சப்படும் அளவுக்கு அதிகம் இல்லை என்றாலும் இந்த உயர்வு தொடர்ந்தால், 3-வது அலை ஆரம்பித்துவிடுமோ என்ற எண்ணம் மக்களிடையே தோன்றிவிடும்.

விழிப்புணர்வு
இந்த எண்ணத்தை போக்க வேண்டுமென்றால், அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளுக்குள்ளும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு கடுமையாக்கப்பட வேண்டும். மேலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள சாலைகளில் அதிக நபர்கள் கூடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யவும், குறிப்பிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அலை மோதாமல் இருப்பதை கண்காணிக்கவும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, ஏற்ற இறக்கமாக உள்ள கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையை காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story