தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் - சென்னை வானிலை மையம்


தென்மேற்கு  பருவமழை இயல்பை விட அதிகம் - சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 30 Sep 2021 1:33 PM GMT (Updated: 30 Sep 2021 1:33 PM GMT)

ஜுன் 1 முதல் செப்.30 வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழையின் அளவு 17 சதவிகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.


சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜுன் 1 முதல் செப்.30 வரையிலான தென்மேற்கு  பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு  33 செ.மீ.. மழையின் அளவு  17 சதவிகிதம் அதிகமாக  பதிவாகியுள்ளது.


சென்னையை பொறுத்த வரையில் தென்மேற்கு  பருவமழை காலத்தில்  50 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 46 செ.மீ. மழையின் அளவு  7 சதவிகிதம் அதிகமாக  பதிவாகியுள்ளது.

26 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பதிவாகியுள்ளது.14 மாவடங்களில் அதிகம்  பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டத்தில் மிக அதிகம் பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 68 சதவிகிதம் மழை பதிவாகியுள்ளது.திருப்பத்தூர், தேனி, பெரம்பலூர், கோவை மாவட்டங்களில் 50 சதவிகிதம் அதிகமாக மழையின் அளவு பதிவாகியுள்ளது.
 
செங்கல்பட்டு, காரைக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் 10 முதல் 15 சதவிகிதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட தமிழக மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தர்மபுரி,  சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும் என்பதால், அடுத்து இரண்டு தினங்களுக்கு  இந்த மழை நிலவரம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், அக்டோபர் 2, 3, 4 ஆகிய தினங்களில்  குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40-50 கி.மீ வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story