நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன


நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன
x
தினத்தந்தி 3 Oct 2021 8:57 PM GMT (Updated: 3 Oct 2021 8:57 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, மலைரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் அதே சாலையில் குஞ்சப்பனை அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக அதிகாலை 1 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது தவிர மழை காரணமாக டானிங்டன் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

தண்டவாளத்தில் பாறை

இதேபோன்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் மரப்பாலம் தர்கா அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் 150 பயணிகளுடன் வந்த மலைரெயில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டது.

அதற்குள் ஒருசில பயணிகள் மலைரெயிலை விட்டு இறங்கி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்து, பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டி, குன்னூருக்கு சென்றனர்.

ஊட்டியில் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பலத்த காற்று காரணமாக பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேருடன் சாய்ந்தது. கோத்தகிரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த கரடி ஒன்று உயிரிழந்தது.

மூதாட்டி பலி

ஈரோட்டில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடைய மகன் காயம் அடைந்தார்.

Next Story