சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு


சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2021 10:56 PM GMT (Updated: 5 Oct 2021 10:56 PM GMT)

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப் பிரிவிற்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு திடீரென சென்று ஆய்வு செய்து வருகிறார். சமீபத்தில் அரசு நிகழ்ச்சிக்காக தர்மபுரி மாவட்டத்திற்கு சென்றிருந்த அவர் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். இதை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பெரிதும் வரவேற்றனர்.

அவர் தனது சுற்றுப்பயணங்களில் அரசினர் மாணவர் விடுதி, கூட்டுறவு கடன் சங்கம் போன்ற இடங்களுக்கும் முன்னறிவிப்பின்றி திடீரென சென்று ஆய்வு செய்தார். மேலும் கடந்த வாரங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் நேரடியாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதுபோல் களங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் நேரடியாக திடீரெனச் சென்று முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொள்வது, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பணி உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இடைத்தரகர்

சமீப காலமாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கோட்டைக்கு வெளியே மக்கள் வரிசையாக நிற்பதற்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு, சில கோரிக்கைகளுக்காக இடைத்தரகர்கள் புகுந்து பணம் பெற்று விண்ணப்பங்களை அளித்து வந்தனர். அதுபோல் யாருக்கும் மக்கள் யாரும் பணம் கொடுக்க வேண்டாம். வெள்ளைத்தாளில் அவர்களாகவே தங்களின் கோரிக்கையை எழுதிக்கொடுத்தால் போதுமானது என்றும் அரசு அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து மக்களுக்கு மனுக்களை எழுத போலீசார் உதவி செய்து வருகின்றனர்.

திடீர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று தனது அலுவல்களை முடித்துவிட்டு, பகல் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரானார். அவர் செல்லும் காரும் தயாராக இருந்தது. ஆனால் அங்கிருந்து அவர் நடந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலத்திற்கு வந்தார்.

அவருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். முதல்-அமைச்சர் தனிப்பிரிவின் தனி அதிகாரியின் அலுவலத்திற்கு செல்லாமல், பொதுமக்கள் வரிசையில் நின்று மனு கொடுக்கும் இடத்திற்கு சென்றார்.

அங்கு கோரிக்கை மனு அளிப்பதற்காக ஏற்கனவே அன்புக்கரசி, சுகுனா, வனிதா, ஜெயகோபால் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம், ‘என்ன கோரிக்கை தொடர்பாக மனு கொடுக்க வந்தீர்கள்?’ என்று கேட்டு, மனுக்களை வாங்கினார். அவர்களும், தங்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டதாகவே மகிழ்ந்து, கோரிக்கைகளைக் கூறினர். அந்த மனுவை அலுவலர்களிடம் கொடுங்கள் என்றும், அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

உடனடி நடவடிக்கை

அங்கிருந்த முதல்-அமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ், தனிப்பிரிவில் பெறப்படும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை ஆகியவை குறித்து முதல்-அமைச்சரிடம் விளக்கமாக கூறினார். சுமார் 10 நிமிடங்கள் ஆய்வை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தனது இல்லத்திற்கு புறப்பட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மனுதாரர்களில் ஒருவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை வைத்தார். இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல்போன மகனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அலுவலர்களுக்கு அறிவுரை

மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த முதல்-அமைச்சர், அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படுவதை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் என்றும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு உரிய பதில்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மிகுந்த மகிழ்ச்சி

இந்த நிகழ்வு குறித்து நிருபர்களிடம் பேசிய ஷில்பா பிரபாகர் சதீஷ், தினமும் அதிக மனுக்கள் வருவதால், அதுபற்றி அவர் கேட்டறிந்தார். அந்த மனுக்கள் அனைத்திற்கும் தகுதியின் அடிப்படையில் உரிய தீர்வு காணப்படும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு வந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுவிட்டன என்று கூறினார்.

கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த சுகுனா மற்றும் அவரது மகள் வனிதா, “ஸ்ரீபெரும்புதூரில் ஓடு வேயப்பட்ட வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். அந்த இடத்திற்கு பட்டா இல்லை. ஜமாபந்தி உள்ளிட்ட பல இடங்களில் மனு கொடுத்தும் பட்டா கிடைக்கவில்லை. எனவே முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தோம். அங்கு எதிர்பாராதவிதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமே மனு கொடுத்தது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்” என்று கூறினர்.

Next Story