வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்


வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2021 12:05 AM GMT (Updated: 7 Oct 2021 12:05 AM GMT)

‘வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வடபழனி முருகன் கோவில் மற்றும் ஆதிமூலப்பெருமாள் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்களில் திருப்பணிகள்

வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணிகள் ரூ.2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோவிலுக்கு முன்பு உள்ள கூரைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ.16 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திருமண மண்டபங்கள், ரூ.9 கோடி மதிப்பீட்டில் அன்னதான கூடங்கள், முடி காணிக்கை செலுத்தும் இடம், ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம், ரூ.40 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகளுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேலும் கூடுதல் வசதிக்காக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இடம் தனியாக கட்டப்படும்.

கோபுர தரிசனம் காண்பதற்காக...

வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவில் நுழைவுவாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ.8 லட்சம் செலவில் தற்காலிகமாக பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான கடைகளை திறந்துவைத்துள்ளோம்.

இதைத்தொடர்ந்து, பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோவிலுக்கு முன்பிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. திருப்பணிகள் நடைபெற்றுவரும் கோவில்களில் விரைவில் பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு நிகராக...

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.150 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகமாக வரும் 553 கோவில்களை மேம்படுத்துவதற்கு வரைவு திட்டம் தயாரிக்கப்படும். சட்டசபையில் அறிவித்த 300 கோவில்களில் திருப்பணிகளை தொடங்கி, அடுத்த மானிய கோரிக்கைக்குள் குடமுழுக்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story