நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை அகற்ற வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2021 12:27 AM GMT (Updated: 8 Oct 2021 12:27 AM GMT)

பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள கைனூர்கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை வைக்க பஞ்சாயத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி சிலையும் வைக்கப்பட்டது. அகற்ற உத்தரவு

இந்த சிலை உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று அரக்கோணம் தாசில்தார் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த கிராமத்தை சேர்ந்த வக்கீல் வீரராகவன் வழக்கு தொடர்ந்தார். அந்த சிலையை அகற்றினால், மிகப்பெரிய தலைவரை அவமதிக்கும் விதமாகி விடும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

கடந்த 7 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

நிராகரிப்பு

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உரிய அனுமதியின்றி பொது இடங்களில் சிலைகளை வைக்க மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டும், ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டும் உத்தரவிட்டுள்ளன. அதன்படி, சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தவறு எதுவும் இல்லை. எனவே, மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

தலைவர்களை கொண்டாட தொண்டர்களுக்கு உரிமை உண்டு. இதற்காக சிலைகளையும் வைக்கலாம். ஆனால், ஒரு தலைவரின் கொள்கையை மற்றொரு தலைவர்களின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

கொள்கை ரீதியாக அவர்கள் மாறுபடுகின்றனர். இதனால், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் நாட்டின் சித்தாந்தத்தை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தலைவர்களின் தியாகம்

தலைவர்களின் சிலைகளினால் தமிழகத்தில் கலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பலமுறை ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் கொண்டாட்டத்தின்போது, சாதி, மத, இன ரீதியாக மோதல்கள் ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த தலைவர்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்துள்ளனர்.

ஒரு போதும் சாதி, மத ரீதியான பிரிவினையை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. எனவே, அந்த தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதையும் ஏற்க முடியாது.

பொதுமக்களின் கடமை

சாதி, மத, மொழி உள்ளிட்டவையின் அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் தங்களது தலைவர்களின் சிலைகளை, போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்களில் வைக்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் சிலைகளை அவர்கள் முறையாக பராமரிப்பதும் இல்லை. சிலைகளினால் கலவரமும் வருகிறது.

அதனால் சட்டத்தை முறையாக அரசு அமல்படுத்தினால் மட்டும், சுதந்திரமாக வாழ்கிறோம் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் ஏற்படுத்த முடியும். பொதுமக்களுக்கு, அரசியல் அமைப்பு சட்டம் உரிமையை மட்டும் வழங்கவில்லை. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும். ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கடமையையும் வழங்கியுள்ளது. ஆனால், நாம் உரிமையை கேட்கிறோமே தவிர, கடமைகளை மறந்து விடுகிறோம்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியும் தங்களது தலைவர்களின் சிலையை வைத்து கொண்டாடுகிறது. எதிர்க்கட்சித்தலைவர்களின் சிலையை பராமரிப்பதில்லை. பின்னர், எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறும்போது, இதேபோல்தான் செயல்படுகிறது. தனியார் நிலத்தில் தலைவர்களின் சிலையை அமைத்து கொண்டாடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

பொது இடத்தில் சிலை வைத்தால்தான் தங்களது தலைவர் மிகப்பெரியவர் என்று ஒரு பிரிவு மக்கள் நினைக்கின்றனர். ஒரு தலைவரை ஒரு பிரிவினர் புகழ்ந்து கொண்டாடுவதும், மற்றொரு பிரிவினர் அந்த தலைவரை இகழ்ந்து விமர்சனம் செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

சிலைகளை அகற்ற வேண்டும்

இதற்காக ‘தலைவர்கள் பூங்கா' என்ற ஒரு பூங்காவை உருவாக்கி, பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலை எல்லாம் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். சட்டவிரோதமாக பொது இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறேன்.

தமிழகம் முழுவதும், பொது இடங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நெடுஞ்சாலையோரங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எத்தனை சிலைகள் உள்ளன? என்பதை தமிழக உள்துறை செயலாளர் 3 மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும்.

சிலைகள் இடமாற்றம்

பின்னர், ஆக்கிரமிப்பு செய்தும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சட்ட விதிகளை பின்பற்றி அப்புறப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சிலைகளை வைக்க ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது. அதேநேரம் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

‘தலைவர்கள் பூங்கா' என்ற பெயரில் பூங்கா அமைக்க மாநிலம் முழுவதும் தகுந்த இடத்தை உள்துறை செயலாளர் அடையாளம் காண வேண்டும். அங்கு, ‘தலைவர்கள் பூங்காவை' உருவாக்கி, தலைவர்களின் புதிய சிலைகளை வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முறையான அனுமதி பெற்று ஏற்கனவே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம், இந்த பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

பராமரிப்பு செலவு

இந்த பூங்காவில் வைக்கப்படும் தலைவர்களின் சிலையை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்கான செலவு தொகையை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் இருந்து பெற வேண்டும். பணம் தரவில்லை என்றால், சட்டவிதிகளை பின்பற்றி அவர்களிடம் வசூலிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை எல்லாம் 6 மாதத்துக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story