தமிழக உளவுப்பிரிவு போலீசுக்கு கூடுதலாக ஒரு சூப்பிரண்டு நியமனம் அரசு உத்தரவு


தமிழக உளவுப்பிரிவு போலீசுக்கு கூடுதலாக ஒரு சூப்பிரண்டு நியமனம் அரசு உத்தரவு
x
தினத்தந்தி 8 Oct 2021 10:52 PM GMT (Updated: 8 Oct 2021 10:52 PM GMT)

தமிழக உளவுப்பிரிவு போலீசுக்கு கூடுதலாக மேலும் ஒரு சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகர போலீசுக்கு ஒரு பாரம்பரியம் இருப்பதைப்போல, தமிழக உளவுப்பிரிவு போலீசுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அதன் போலீஸ் சூப்பிரண்டு பதவியும் பாரம்பரியச் சிறப்பு மிக்கது. தமிழக போலீஸ் உருவானபோதே, இந்த உளவுப்பிரிவு சூப்பிரண்டு பதவியும் உருவானது.

மறைமுகமாக இந்த பதவிக்கும் சகல அதிகாரங்களும் உண்டு. அரசுக்கு அனைத்துவிதமான தகவல்களையும் எஸ்.எஸ்.பி. எனப்படும் இந்த பதவியில் இருக்கும் சூப்பிரண்டுதான் உளவுப்பிரிவு தலைவர் வழியாக வழங்குவார்.

இந்த பதவியை அலங்கரிக்கும் அதிகாரிக்கு அதிக பணிச்சுமை இருப்பதாக கருதப்பட்டதால், இப்பதவிக்கு கூடுதலாக ஒரு போலீஸ் சூப்பிரண்டை நியமிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர். சைலேந்திரபாபு டி.ஜி.பி.யாக பதவி ஏற்றதும், கூடுதலாக ஒரு சூப்பிரண்டை நியமிக்க உளவுப்பிரிவு தலைவர் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதத்துடன் ஆலோசித்து முடிவு செய்தார். அரசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

சரவணன் நியமனம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கினார். அது உடனடியாக அரசு ஆணையாக பிறப்பிக்கப்பட்டது. அதன்படி உளவுப்பிரிவின் 2-வது சூப்பிரண்டாக சரவணன் நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றிய சரவணன் ஏற்கனவே இந்த பணியை மறைமுகமாக செய்துவந்தார். தற்போது அது நேரடி செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஏற்கனவே எஸ்.எஸ்.பி.-1 என்ற பெயரில் மாநில உளவுப்பிரிவின் சூப்பிரண்டாக அரவிந்தன் உள்ளார். அவருடன் இணைந்து எஸ்.எஸ்.பி.-2 என்ற பெயரில் சரவணன் செயல்படுவார் என்று டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களின் அலுவல்கள் என்ன என்பதும் அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேல் அதிகாரியாக டி.ஐ.ஜி. ஆசியம்மாள் தற்போது பணியாற்றுகிறார்.

உளவுப்பிரிவின் தலைவராக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளார். எஸ்.எஸ்.பி.-2 என்ற பதவியை முதன்முதலாக அலங்கரித்துள்ள சரவணன், ஏற்கனவே சென்னை, நெல்லை போலீசில் துணை கமிஷனராக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story