மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து


மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 18 Oct 2021 9:59 PM GMT (Updated: 18 Oct 2021 9:59 PM GMT)

மிலாது நபி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், இஸ்லாமியர்களால் மிலாது நபி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுகிறது.

கவர்னர்

அதையொட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மிலாது நபியையொட்டி நம்முடைய தமிழக மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலக நன்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நபிகள் நாயகத்தின் முக்கியமான செய்தியாகும்.

இந்த நல்ல தருணத்தில், அமைதியான, முற்போக்கான மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மிலாது நபி' திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நபிகள் நாயகம் இளம் பருவத்தில் துயரமிகு சூழலில் வளர்ந்திருந்தாலும், வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.

ஏழை, எளிய மக்களுக்கு உணவளியுங்கள் என்ற கருணையுள்ளதிற்குச் சொந்தக்காரரான அவர், தணியாத இரக்கமும், அன்புமிக்க அரவணைப்பும் கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும், அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்து கருவூலங்கள்.

அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் தி.மு.க.வுக்கும், மக்களால் அமையபெற்ற தி.மு.க. அரசுக்கும் இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாது நபி திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்களது அன்பார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து மகிழ்கிறோம். பிறருக்கு உதவி செய்பவன், கோபத்தை அடக்குபவன், பிறரை மன்னிப்பவன் இவர்களுக்கு இறைவன் எப்போதும் இறங்குவான், பிறருக்கு உதவக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அலட்சியப்படுத்தாதே, மற்றோருடன் அன்போடும், ஆதரவோடும் பழகு. உன்னிடம் இருப்பது தண்ணீரேயானாலும் அத்தண்ணீர் தேவைப்படுவோர்க்கு அதை அளித்து மகிழ்ந்திடு போன்ற இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் அருட்போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அறமும், அமைதியும் தழைத்தோங்கும்.

இறைத் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும, சகோதரத்துவமும் நிறையட்டும். நலமும் வளமும் பெருகட்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், முஸ்லிம் மக்கள் கழக பொதுச்செயலாளர் ஏ.கே.தாஜூதீன் உள்பட பலர் மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Next Story