சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு


சென்னை ஐகோர்ட்டில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 9:58 PM GMT (Updated: 20 Oct 2021 9:58 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் 4 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி இந்த 4 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசினார். அவரை தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.அமல்ராஜ், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.

சைக்கிள் பயணம்

இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் பேசினர். நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம் பேசும்போது, “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்ற திருக்குறளின்படி நடுநிலையோடு நீதிபதியாக பணியாற்றுவேன்” என்றார்.

நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் நான் பிறந்தேன். இப்போதுள்ள வசதிகள் போல் 1970-களில் இல்லை. பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு என் தந்தை தினமும் என்னை சைக்கிளில் அழைத்து சென்றுவிடுவார். புதுச்சேரி சட்டக்கல்லூரியில் படித்து, வக்கீலாக பதிவு செய்து, சென்னை ஐகோர்ட்டுக்குள் நுழைந்தபோது எனக்கு யாரும் தெரியாது. 28 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி தற்போது நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

தாத்தாவின் பாடத்திட்டம்

நீதிபதி ஆர்.விஜயகுமார் பேசும்போது, “என்னை இந்த பதவிக்கு பரிந்துரை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், வி.ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

அதேபோல நீதிபதி முகமது சபிக் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம், திருச்சி மாவட்டம் நாகையநல்லூரைச் சேர்ந்தவர். இவர் 1967-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை என்.ஆர்.துரை, தாயார் சாரதா. கணவர் சுந்தரம் ஆடிட்டராக பதவி வகித்து வருகிறார். கணித ஆசிரியராக பணியாற்றிய இவரது தாத்தா ராமசாமி வகுத்துக்கொடுத்த கணக்கு பாடத்திட்டமே தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற ஸ்ரீமதி சுந்தரம், கடந்த 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, 32 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றிய அனுபவம் உடையவர்.

தலைமை ஆசிரியரின் மகன்

நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தெ.து.தாஸ் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். தாயார் பத்மஜோதி. மனைவி யு.ஜெயப்பிரியா, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர்களது மகன் ஹேமந்த் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீலாக பதவி வகித்து வந்தார்.

கவுரவ பேராசிரியர்

நீதிபதி ஆர்.விஜயகுமார், 1970-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஏ.ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் விமலாதேவி. நீதிபதி விஜயகுமாருக்கு அம்பிகா என்ற மனைவியும், சாய்கார்த்தி என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியபோது, வக்கீல் தொழிலை இடைகாலமாக நிறுத்தி வைத்தார். அப்போது, சட்டக்கல்லூரி கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். தமிழக அரசு வக்கீலாக பணியாற்றியுள்ளார்.

16 காலிப்பணியிடங்கள்

நீதிபதி முகமது சபிக், 1972-ம் ஆண்டு பிறந்தார். சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.எம்.அப்துல் காதர், சென்னை ஐகோர்ட்டில் 26 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றியுள்ளார். 2018 முதல் அரசு சிறப்பு பிளீடராகவும் பணியாற்றினார். வரி தொடர்பான வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பிற மாநில ஐகோர்ட்டுகளிலும் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

புதிதாக 4 நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பெண் நீதிபதிகள்

நாட்டிலேயே சென்னை ஐகோர்ட்டில்தான் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அதாவது 13 பெண் நீதிபதிகள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி ஓய்வு பெற்றார். இதனால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. தற்போது, நீதிபதி ஸ்ரீமதி சுந்தரம் பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மீண்டும் 13 ஆக உயர்ந்துள்ளது.

Next Story