26-ந் தேதி தொடங்குகிறது: “வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும்”


26-ந் தேதி தொடங்குகிறது: “வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவில் இருக்கும்”
x
தினத்தந்தி 22 Oct 2021 7:21 PM GMT (Updated: 22 Oct 2021 7:21 PM GMT)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது என்றும், இயல்பான அளவில் மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை இன்றுடன் (சனிக்கிழமை) பெரும்பாலான மாநிலங்களில் இருந்து விலகிவிட்டது. அதனைத்தொடர்ந்து வருகிற 26-ந் தேதியன்று இந்தியாவில் இருந்து முழுவதுமாக தென்மேற்கு பருவமழை விலகுகிறது.

இதையடுத்து வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் தொடங்க உள்ளது. இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 1-ந் தேதி முதல் தற்போது (நேற்று) வரை தமிழகத்தில் 12 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 17 செ.மீ. இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

இனிவரக்கூடிய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

26-ந் தேதி வடகிழக்கு பருவமழை

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 23-ந் தேதி (இன்று) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதன் தொடர்ச்சியாக 24 (நாளை), 25 (நாளை மறுதினம்), 26 (செவ்வாய்க்கிழமை)-ந் தேதிகளிலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை 26-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி தென்மேற்கு பருவ காற்று இந்தியாவில் இருந்து முழுவதுமாக விலகுகிறது. இயல்பாக ஓராண்டில் 6 புயல் உருவாகும். வடகிழக்கு பருவமழை காலங்களில் 2 புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அது தமிழ்நாட்டில் கண்டிப்பாக உருவாகும் என்று சொல்ல முடியாது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை சென்றது. இதனால் இயல்பை விட மழை அதிகம் பெய்தது. இந்த ஆண்டை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், அமராவதி அணை 10 செ.மீ., செஞ்சி, அரவக்குறிச்சி, திருமூர்த்தி அணை தலா 7 செ.மீ., காமாட்சிபுரம், கன்னிமார், மடத்துக்குளம் தலா 6 செ.மீ., வீரபாண்டி, பரமத்திவேலூர், அரியலூர், கே.பரமத்தி, வேடசந்தூர், கொத்தவாச்சேரி தலா 5 செ.மீ., கோவில்பட்டி, சேலம், உத்தமபாளையம், திருவிடைமருதூர், அரக்கோணம், கோபிசெட்டிப்பாளையம் தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Next Story