ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி


ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 23 Oct 2021 12:28 AM GMT (Updated: 23 Oct 2021 12:28 AM GMT)

9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது.

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ந்தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மறைமுக தேர்தல்

இதில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி பதவிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தன.

இதில் 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்பதவிகளையும் தி.மு.க.கைப்பற்றியது.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க.-8 இடங்களிலும், காங்கிரஸ்-1, ம.தி.மு.க.-1, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றனர். இதையடுத்து நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த தி.மு.க.வை சேர்ந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கலெக்டர் ஆர்த்தி அறிவித்தார்.

இதேபோல காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக தி.மு.க.வினர் நித்தியா சுகுமாரும் போட்டியின்றி தேர்வானார். அவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.வே கைபற்றியது. வாலாஜாபாத் யூனியன் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் 15 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம் சத்யாநகரில் நடந்தது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வின் செம்பருத்தி துர்கேஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்ட துணைத்தலைவர் பதவிக்கு காயத்ரி அன்புசெழியன் போட்டியின்றி தேர்வானார். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சான்றிதழ்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டங்கொளத்தூர், திருப்போரூர், பரங்கிமலை, சித்தாமூர், அச்சரப்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய ஒன்றிய குழுத்தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. மதுராந்தகம் ஒன்றிய குழுத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. லத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே கட்சியை சேர்ந்த செல்வலட்சுமி துணைத்தலைவராக தேர்வானார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 9 யூனியன்களின் தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மற்ற 8 யூனியன் துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.வே தன்வசப்படுத்தியது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தமிழ்செல்வி வெற்றி பெற்றார். துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய 9 யூனியன் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. குருவிகுளம் யூனியன் தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. குருவிகுளம், கீழப்பாவூர் யூனியன் துணைத்தலைவர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றியது. மேலநீலிதநல்லூர் துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மற்ற 7 யூனியன் துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.வே கைப்பற்றி உள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷீலா சேரன் துணைத்தலைவராக தேர்வானார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை, கோலியனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, வல்லம், ஒலக்கூர், மேல்மலையனூர், மயிலம், வானூர், திருவெண்ணெய்நல்லூர், முகையூர், கண்டமங்கலம் ஆகிய 12 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. கட்சியை சேர்ந்த 2 பேர் போட்டியிட்டனர். இதனால் போராட்டம் நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த புவனேஸ்வரி பெருமாள் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக அதே கட்சியை சேர்ந்த வக்கீல் தங்கம் தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் ஆகிய 9 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. 9 ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.வே கைப்பற்றி உள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

வேலூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பாபு, துணை தலைவராக காங்கிரசை சேர்ந்த கிருஷ்ணவேணி, ராணிபேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வின் ஜெயந்திதிருமூர்த்தி, துணை தலைவராக அக்கட்சியின் நாகராஜ், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.வின் என்.கே.ஆர்.சூரியகுமார், துணை தலைவராக அக்கட்சியின் பிரியதர்ஷினிஞானவேல் தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பதவிகளைகளையும் தி.மு.க. கைப்பற்றியது. குடியாத்தம் ஒன்றிய துணை தலைவர் பதவியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. மற்ற 6 ஒன்றிய துணை தலைவர் பதவிகளை தி.மு.க.வே கைப்பற்றியது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தலைவர் மற்றம் துணை தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம், வாலாஜா, திமிரி, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நெமிலி தவிர மற்ற 6 ஒன்றியங்களுக்கும் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடந்தது. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை தலைவர் பதவியை சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றினார். மற்ற அனைத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளையும் தி.மு.க.வே கைப்பற்றியது.

Next Story