சென்னையில் 178 இளம் ராணுவ வீரர்கள் வீர சாகசங்கள்


சென்னையில் 178 இளம் ராணுவ வீரர்கள் வீர சாகசங்கள்
x
தினத்தந்தி 20 Nov 2021 10:12 PM GMT (Updated: 20 Nov 2021 10:12 PM GMT)

178 இளம் ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு சாகச நிகழ்ச்சி சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடந்தது.

பயிற்சி நிறைவு விழா

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கான, அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) உள்ளது. இந்த மையத்தில் 11 மாத காலம் 124 வீரர்கள், 29 வீராங்கனைகள் பயிற்சி முடித்தனர். இதேபோல நட்பு நாடுகளை சேர்ந்த 16 வீரர்கள் மற்றும் 9 வீராங்கனைகளும் பயிற்சி நிறைவு செய்தனர். ஆக மொத்தம் 178 வீரர்-வீராங்கனைகள் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இவர்கள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள பரமேஸ்வரன் டிரில் சதுக்கத்தில் நடந்தது.

அசத்தல்

இதில், 11 மாதங்களில் கற்றுக்கொண்ட பயிற்சிகளை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் சாகசமாக செய்து அசத்தினார்கள். அவற்றை ராணுவ வீரர்களின் பெற்றோர், அதிகாரிகள் பயிற்சி மையத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலரும் கண்டு ரசித்தனர்.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சி.பி.மொகந்தி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட சித்தாந்த் சர்மாவுக்கு வீரவாள் மற்றும் தங்க பதக்கத்தையும், டிம்பிள் சிங் பாதி என்ற வீரருக்கு வெள்ளி பதக்கத்தையும், முனீஸ் குமார் என்ற வீரருக்கு வெண்கல பதக்கத்தையும் வழங்கினார்.

தன்னிகரற்ற சேவையாற்ற அழைப்பு

முன்னதாக பயிற்சியை நிறைவு செய்த ராணுவ வீரர்கள் சக வீரர்களை வானில் தூக்கி போட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

பயிற்சியை நிறைவு செய்த இளம் ராணுவ வீரர்களுக்கு அறிவுரை வழங்கி சி.பி.மொகந்தி பேசும்போது, “நாட்டுக்கு தன்னிகரற்ற சேவையாற்ற வேண்டும் என்ற ராணுவத்தின் முக்கிய மாண்புகளை கடைப்பிடிக்கவேண்டும். உங்களுடைய அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்கவேண்டும்” என கூறினார்.


Next Story