அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனா...?


அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனா...?
x
தினத்தந்தி 24 Nov 2021 8:22 AM GMT (Updated: 2021-11-24T13:52:57+05:30)

அ.தி.மு.க. வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

சென்னை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றியை கோட்டைவிட்டு விடக்கூடாது என அ.தி.மு.க. நினைக்கிறது. வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக  இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் கூடி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் அ.தி.மு.க வழிகாட்டுதல் குழுவை சீரமைக்க வேண்டும். 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18 ஆக அதிகரிக்க வேண்டும். வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் சிலர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story