சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் அமைச்சர் தகவல்


சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 11:24 PM GMT (Updated: 25 Nov 2021 11:24 PM GMT)

சென்னை குடிசைப்பகுதிகளில் 32 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயபுரம் தங்கசாலை பஸ் நிலையத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 76.23 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 40.31 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 72 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்தும் காத்திருக்கின்றனர். தற்போது 1 கோடியே 1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக, இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக முதன்முதலில் வீடுகளை தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

அலட்சியம் வேண்டாம்

மேலும், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சமீபத்தில் ‘என்.ஐ.இ’ என்கின்ற தேசிய நிறுவனம் மேற்கொண்ட கள கணக்கெடுப்பின்படி சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் 32 சதவீதம் பேருக்கும், நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் 35 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி செய்ய வேண்டும்

இதேபோன்று குடிசைப் பகுதிகளில் 21 சதவீத மக்கள் மட்டுமே முக கவசம் அணிகின்றனர் என்றும், சென்னையில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் 51 சதவீத பேர் முக கவசம் அணிகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முககவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ராயபுரம் எம்.எல்.ஏ ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story