நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.வில் இன்று முதல் 29-ந்தேதி வரை விருப்ப மனு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.வில் இன்று முதல் 29-ந்தேதி வரை விருப்ப மனு
x
தினத்தந்தி 26 Nov 2021 12:02 AM GMT (Updated: 26 Nov 2021 12:02 AM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க.வில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

இன்று முதல்

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சி தொண்டர்கள் வருகிற 26-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் அ.தி.மு.க.வினர் மட்டும் தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை அ.தி.மு.க. அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் சென்னையை சேர்ந்த மாவட்ட கழகங்கள் மூலமாக தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவி இடத்துக்கு ரூ.5 ஆயிரம், நகர மன்ற வார்டு உறுப்பினர் ரூ.2 ஆயிரத்து 500, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ.1,500 விண்ணப்ப கட்டணம் ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.க.வினர் அதற்கான கட்டண அசல் ரசீதை வைத்திருப்பவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story