தமிழகத்தில் இதுவரை 7 கோடி பேருக்கு தடுப்பூசி: 12-வது மெகா முகாமில் 16 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்


தமிழகத்தில் இதுவரை 7 கோடி பேருக்கு தடுப்பூசி: 12-வது மெகா முகாமில் 16 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்
x
தினத்தந்தி 28 Nov 2021 11:51 PM GMT (Updated: 28 Nov 2021 11:51 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், நேற்று நடைபெற்ற 12-வது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை அடையாறில் நேற்று 12-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘78 லட்சம் பேர் 2-வது தவணை செலுத்தவில்லை’

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்கிற நிலையில், 12-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் காலை முதல் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி முகாம் ஒரு இயக்கமாக தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 78 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

தமிழகம் நெருங்குகிறது

தமிழகத்தில் 77.33 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 42.10 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அளவில் நியமிக்கப்பட்ட சதவீதத்தை தமிழகம் நெருங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வேளச்சேரி எம்.எல்.ஏ. ஜே.எச்.எம்.அசன் மவுலானா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

12-வது முகாம்

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 12-வது மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 5 ஆயிரத்து 293 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 140 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 10 லட்சத்து 16 ஆயிரத்து 153 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

சென்னையில் 1,600 முகாம்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 80 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகத்தில் இதுவரை 78.35 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 43.86 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

7 கோடி பேருக்கு தடுப்பூசி

தற்போது வரை தமிழகத்தில் 7 கோடிக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடுப்பூசி போட்டவர்களுக்கே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தான் மதுவிற்பனை செய்யப்படும் என்று கட்டாயமாக்கப்படுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் இதனை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனுப்பியிருந்த அறிக்கையில், ‘பொது சுகாதார விதிகளின்படி, பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளும் பொது இடம் தான். எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதை கடுமையாக கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story