குடியாத்தம் அருகே ஒரே இரவில் 7 முறை நிலநடுக்கம்


குடியாத்தம் அருகே ஒரே இரவில் 7 முறை நிலநடுக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:00 PM GMT (Updated: 29 Nov 2021 9:00 PM GMT)

குடியாத்தம் அருகே நேற்று முன்தினம் ஒரேநாள் இரவில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. வீடுகளிலும் விரிசலும் ஏற்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில வினாடிகள் இந்த அதிர்வு நீடித்துள்ளது.

அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளன. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்துள்ளன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

ஒரே இரவில் 7 முறை

நிலநடுக்கம் நின்ற நிலையில், பின்னர் சில வினாடிகளுக்கு பின் மீண்டும், மீண்டும் என 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. அப்போது சத்தத்துடன் நிலநடுக்கம் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் நின்ற பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளை பார்த்தபோது பல வீடுகளில் பெரிய அளவு விரிசல்கள் ஏற்பட்டு இருந்தன. 5 வீடுகளில் விரிசல்கள் இருந்தன.

இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் மற்றும் காரப்பட்டு கிராமங்களிலும், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை, சென்னாம்பேட்டை பகுதிகளிலும் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்று கொண்டனர்.

Next Story