நெல்லை, தென்காசியில் விடிய, விடிய கனமழை: தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்


நெல்லை, தென்காசியில் விடிய, விடிய கனமழை: தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:03 PM GMT (Updated: 29 Nov 2021 9:03 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறியது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையொட்டி பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கரைபுரளும் வெள்ளம்

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடுவதால் தண்ணீர் இரைச்சலுடன் ஆர்ப்பரித்தவாறு செல்கிறது.

குறுக்குத்துறை முருகன் கோவில் மேல் மண்டபத்தை மூழ்கடிப்பது போல் தண்ணீர் செல்கிறது. கோவிலுக்கு செல்லும் பாலத்தை தண்ணீர் முழுமையாக மூழ்கடித்தது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறி காட்சி அளிக்கிறது. 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிறுத்தை

இந்த நிலையில் நேற்று காலை அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறையினர் இறந்த சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு சிங்கம்பட்டி காப்புக்காடு பகுதியில் எரியூட்டினர். அந்த சிறுத்தை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதற்கிடையே தொடர் கனமழையால் கடம்பூர், விளாத்திகுளம் பகுதியில் 2,800 ஏக்கர்கள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குமரியில் வெள்ளத்தில் மிதந்த கிராமங்கள்

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழையால் சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் புகுந்து ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 12, 13-ந்தேதிகளில் தொடர் மழையால் குமரி மாவட்டம் வெள்ளக்காடாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story