அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு
தேர்தலுக்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் ‘ஒற்றை தலைமை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. தொடர்ந்து இரட்டை தலைமையின் கீழ் தான் இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கட்சியின் சட்டத்திட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திட்டத்தின்படி, ‘அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கின் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ந்தேதி தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் இன்று தொடங்கியது மதியம் 12 மணி வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்
டிசம்பர் 1ல் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகிறார்கள்.
உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு அதன்பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.
2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் தன்து நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் இந்தத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரண இன்று மதியம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story