ரோந்து சென்றபோது பரிதாபம்: பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏட்டு பலி


ரோந்து சென்றபோது பரிதாபம்: பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏட்டு பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 8:14 PM GMT (Updated: 22 Dec 2021 8:14 PM GMT)

மதுரையில் ரோந்து சென்றபோது பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து போலீஸ் ஏட்டு பலியானார்.

மதுரை,

மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலைய ஏட்டுகள் கண்ணன் (வயது 48), சரவணன் (44). நேற்று முன்தினம் இரவில் முனிச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் நெல்பேட்டையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எதிரே சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட்டமாக நின்று டீ குடித்து கொண்டிருந்தனர். உடனே ஏட்டுகள் கண்ணன், சரவணன் ஆகியோர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் நின்றிருந்த இடத்தில் உள்ள பழமையான கட்டிடத்தில் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்தது

திடீரென்று அந்த பழமையான கட்டிடத்தின் முதல் தளத்தின் முன்பகுதி இடிந்து கீழே நின்றிருந்த 2 போலீசார் மீதும் விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் 2 பேரும் சிக்கி உயிருக்கு போராடினர். உடனே அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஏட்டு சாவு

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே சரவணன் இறந்தது தெரியவந்தது. தலை மட்டுமின்றி கை, கால்களில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் அடைந்த கண்ணனுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

இடிந்து விழுந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது என்றும், இதன் உரிமையாளர் முகமதுஇத்ரீஸ் (55) என்பதும் தெரியவந்தது. அந்த கட்டிடத்தில் செயல்படும் பூச்சிமருந்து கடையை வில்லாபுரத்தை சேர்ந்த நாக சங்கர் (51), சுப்பிரமணியன் (57) ஆகியோருக்கு அப்துல்ரசாக் (58) என்பவர் மூலம் வாடகைக்கு விட்டுள்ளதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து முகமது இத்ரீஸ் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலியான போலீஸ் ஏட்டு சரவணனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆகும். அவர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கிரைம் பிராஞ்ச் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். சரவணனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து மதியம் 2 மணிக்கு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவியும், மகள்களும் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

டி.ஜி.பி. நேரில் அஞ்சலி

இதற்கிடையே தமிழக போலீஸ் டி.ஜி. பி.சைலேந்திரபாபு நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் சரவணனின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து சரவணன் உடல் செல்லூர் தத்தனேரி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story