54-வது பிறந்தநாள்: கனிமொழி எம்.பி.க்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


54-வது பிறந்தநாள்: கனிமொழி எம்.பி.க்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Jan 2022 7:02 PM GMT (Updated: 5 Jan 2022 7:02 PM GMT)

கனிமொழி எம்.பி.க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது 54-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவர், தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர் கனிமொழி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி, அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர், சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருக்கு துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன் உள்பட அமைச்சர்களும், தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷானவாஸ் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல்காந்தி வாழ்த்து

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், கனிமொழிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பதிவு செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

கனிமொழி பிறந்தநாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார். சென்னை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் ஆகியோர் வழங்கினர்.

பெண்கள் திருமண வயது

கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்கள் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதா ஆய்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒரே ஒரு பெண் பிரதிநிதி மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது துரதிருஷ்டவசமானது. இந்த மசோதா பெண்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது ஆகும். எனவே மேலும் பெண்களை சேர்த்து இந்த குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story