ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் நேரில் அஞ்சலி


ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 6 Jan 2022 8:16 PM GMT (Updated: 2022-01-07T01:46:17+05:30)

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஊட்டி,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். நேற்று பகலில் ராஜ்பவனில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு கவர்னர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். பின்னர் அவர் காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக நடந்து விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சென்றார்.

மலர் வளையம் வைத்து அஞ்சலி

அங்கு விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கவர்னரின் மனைவி லட்சுமி ரவி, மகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியை கவர்னர் பார்வையிட்டதுடன், விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு ஊட்டி ராஜ்பவனுக்கு சென்றார்.

Next Story