முழு ஊரடங்கையும் மீறி இலவசமாக கொடுத்த கரும்பு கட்டுகளை அள்ளி சென்ற பொதுமக்கள்


முழு ஊரடங்கையும் மீறி இலவசமாக கொடுத்த கரும்பு கட்டுகளை அள்ளி சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Jan 2022 9:02 PM GMT (Updated: 9 Jan 2022 9:02 PM GMT)

முழு ஊரடங்கையும் மீறி இலவசமாக கொடுத்த கரும்பு கட்டுகளை அள்ளி சென்ற பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு.

பூந்தமல்லி,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட காரம்பாக்கம் முதல் பிரதான சாலையில் தனியார் குடோனில் இலவசமாக கரும்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் ஊரடங்கையும் மீறி அங்கு குவிந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் அங்கு இருந்த கரும்பு கட்டுகளை போட்டி போட்டு அள்ளிச்சென்றனர். சிலர் தோளில் தூக்கியும், சிலர் இருசக்கர வாகனங்களிலும் கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வளசரவாக்கம் ரோந்து போலீசார், அங்கிருந்த மக்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கரும்பு கட்டுகளை எடுத்து செல்வதிலேயே குறியாக இருந்தனர். அந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்தான் காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் போலீசார் கூடாரம் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். முழு ஊரடங்கு நாளில் கரும்பு கட்டுகளை பொதுமக்கள் அள்ளிச்செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையிலேயே யாராவது அந்த கரும்பு கட்டுகளை பொதுமக்களுக்கு இலவச வழங்கினார்களா? அல்லது பொங்கல் விற்பனைக்காக லாரியில் வந்து இறக்கி வைத்து இருந்த கரும்பு கட்டுகளை தவறான வதந்தி பரவியதால் பொதுமக்கள் அள்ளிச்சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story