கொளத்தூர்-நாதமுனி இடையே 5 இடங்களில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்


கொளத்தூர்-நாதமுனி இடையே 5 இடங்களில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 11 Jan 2022 10:14 PM GMT (Updated: 11 Jan 2022 10:14 PM GMT)

கொளத்தூர்-நாதமுனி இடையே 5.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு 2-வது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கடந்த ஆண்டு ஜனவரியில் 2-வது முறையாக கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடினமான சுரங்க ரெயில் பாதை ஒன்றைக் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. இந்தப்பகுதியில் உள்ள பாறை, மண் நிலை காரணமாக சுரங்கப்பாதை அமைப்பது சவாலாக கருதப்படுகிறது.

இதனால் முதல்முறையாக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் திறமையானவர்கள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது உண்மையான மதிப்பீட்டைவிட அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டதால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. 6 கட்டுமான டெண்டர்களில் இதுவும் ஒன்றாகும்.

5 சுரங்க ரெயில் நிலையங்கள்

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் 5-வது வழித்தடப்பாதையில் கொளத்தூரில் இருந்து நாதமுனி வரையிலான 5.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 மார்க்கங்களிலும் 2 சுரங்க ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த சுரங்கப்பாதையில், கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசாநகர், வில்லிவாக்கம் புறநகர் நிலையம், வில்லிவாக்கம் பஸ் நிலையம் மற்றும் நாதமுனி ஆகிய 5 சுரங்க ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 3 ஆண்டுகள், 8 மாதங்களில் பணிகளை செய்து ஒப்படைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது.

கொளத்தூர்-நாதமுனி

பணியை தொடங்குவதற்கு முன்பாக நடந்த ஆரம்பகட்ட மண் ஆய்வில், கொளத்தூரில் இருந்து நாதமுனி வரையிலான பாதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டத்தில் அமைக்கப்படும் பணிகளில் கடினமான பாதைகளில் ஒன்று என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 15 மீட்டர் முதல் 21 மீட்டர் ஆழத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஒப்பந்தப்புள்ளி ரத்து

இந்தநிலையில், கொளத்தூர்-நாதமுனி இடையே சுரங்கத்தில் ரெயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோரப்பட்டது. அப்போது ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே முன்வந்து ஏலம் எடுத்தது.

ஆனால் ஏலதாரர் மேற்கோள் காட்டிய மதிப்பு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மதிப்பீட்டைவிட சுமார் 60 சதவீதம் அதிகமாக இருந்தது. எனவே, ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.

தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்

இதற்கிடையில் டிசம்பர் மாத இறுதிக்குள், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் புழுதிவாக்கம்-சோழிங்கநல்லூர் இடையே 11.6 கிலோ மீட்டர் தூர பாதையில் உயர்த்தப்பட்ட வழித்தட தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாதையில் 11 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதற்காக மெட்ரோ ரெயில் மூலம் இணைக்கப்படுகின்றன. இந்த பாதை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரூர்-பூந்தமல்லி இடையேயான பாதையில் மேம்பாலப் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்துவருகிறது. அங்கு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் பாதை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இந்த தகவல்களை தெரிவித்தார்கள்.

Next Story