டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியது யார்? தி.மு.க. அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில்


டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியது யார்? தி.மு.க. அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில்
x
தினத்தந்தி 19 Jan 2022 9:14 PM GMT (Updated: 19 Jan 2022 9:14 PM GMT)

சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியது யார்? என்பது குறித்து தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களின் வாயிலாக எம்.ஜி.ஆருக்கு தனி இடம் கிடைத்தது என்றும், கருணாநிதியால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டமே பின்னர் ‘புரட்சித் தலைவர்’ என்று நிலை பெற்றது என்றும், சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான, வரலாற்றை திரித்து எழுதும் செயலாகும்.

‘நீ முகம் காட்டினால் 30 லட்சம் வாக்குகள் நிச்சயம்’ என்று அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்.ஜி.ஆர்., உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர்தான் மறைந்த தி.மு.க. தலைவரை முதல்-அமைச்சராக ஆக்கியவர். 1977-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி, அ.தி.மு.க. ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, தொடர்ந்து 3 முறை யாராலும் வெல்ல முடியாத ஒரு புரட்சியை செய்ததால் அவருக்கு மக்களே ‘புரட்சித்தலைவர்‘ என்று பெயர் சூட்டினார்கள் என்பதுதான் உண்மையே தவிர, புரட்சி நடிகர், புரட்சித்தலைவராக மாறியது என்பதெல்லாம் கட்டுக்கதை.

எம்.ஜி.ஆர். உயிரோடு...

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டியதாக அரசு செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே மருத்துவத்துக்கு என்று தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் என்பதை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று மாற்றும் வகையில் தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11-11-1987 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 13-11-1987 அன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் 11-12-1987 அன்று பெறப்பட்ட பிறகு அன்றே அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த திருத்த சட்டத்தின்படி, மருத்துவ பல்கலைக்கழகத்தின் பெயர் ‘டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டுவிட்டது. எனவே, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே, எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்போதே சூட்டப்பட்டு, சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது.

மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தல்

இதன் மூலம் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் என்று மறைந்த தி.மு.க. தலைவர் பெயர் சூட்டினார் என்ற வாதம் வடிகட்டின பொய், ‘அண்டப்புளுகு ஆகாசப்புளுகு’ என்பது தெளிவாகிறது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ‘தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், மெட்ராஸ்' என்று மாற்றப்பட்டது. அதாவது ‘தமிழ்நாடு' என்ற வார்த்தை டாக்டர் எம்.ஜி.ஆரின் பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டது. எனவே இனி வருங்காலங்களில் இதுபோன்று வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story