தமிழகம் முழுவதும் 3,787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு அமைச்சர் தகவல்


தமிழகம் முழுவதும் 3,787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2022 12:15 AM GMT (Updated: 20 Jan 2022 12:15 AM GMT)

சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கை மாற்று அறுவை சிகிச்சை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வடசென்னை தி.மு.க. எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையம்

டெல்டா, ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையிலும் பிற நோய்களுக்கான சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இன்று காலை கோஷா ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு வராததால் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ நிலைய அதிகாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில், ரூ.4 கோடியே 80 லட்சம் மதிப்பில் கைமாற்று அறுவை சிகிச்சை கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.

2 அதி நவீன அறுவை அரங்கம், 20 படுக்கைகள், ரூ.2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சுக்கான சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

கிராமங்களில் பாதிப்பு அதிகரிக்கலாம்...

தமிழகத்தில் மொத்தமுள்ள 1.21 லட்சம் குக்கிரமாங்களில் 24 ஆயிரத்துக்கும் மேலான கிராமங்களில் தொற்று பாதிப்பு உள்ளது. நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 28 ஆயிரத்துக்கும் மேலான தெருக்களில் தொற்று இருக்கிறது. சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்து 787 இடங்கள் கொரோனா காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதித்த 94 சதவீதம் பேர் வீட்டு கண்காணிப்பிலேயே உள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.

நீட் எதிர்ப்புக்கு நல்ல பதில்

நீட் மசோதா தொடர்பாக தமிழக எம்.பிக்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளனர். அப்போது அவர் சுகாதாரத்துறை, கல்வித்துறை மந்திரிகளை கலந்து பேசுவதாக கூறியது நல்ல மாற்றம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை போல தனது ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே அமித்ஷா கேட்கும்போது, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நல்ல பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story