தமிழகத்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை


தமிழகத்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2022 6:52 PM GMT (Updated: 2022-01-22T00:22:54+05:30)

தமிழகத்தில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் குறித்து தடுப்பூசிகள், வழிகாட்டு நெறிமுறைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தண்டனை, அபராதத்தொகை உயர்வு என அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயமும், இதனால் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசின் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளது.

கடந்த கால பாடங்களில் இருந்து அரசு நெறிமுறைப்படுத்த வேண்டியது விழிப்புணர்வு, மக்களின் சுயக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே. இதர தடுப்பூசி, முககவசம் அணிதல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு இவையெல்லாம் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை.

இங்கிலாந்து, ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழகத்திலும், தொடர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வணிகர்கள், பணியாளர்கள், அடித்தட்டு அன்றாட கூலிகள் ஆகியோரை மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படாத சூழலை உருவாக்கிட இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு போன்றவற்றை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், அரசு அறிவித்து உள்ள அபராத உயர்வுத் தொகையை உடனடியாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story