கொரோனாவை கட்டுப்படுத்த 3-வது வாரமாக கடைபிடிப்பு: முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்


கொரோனாவை கட்டுப்படுத்த 3-வது வாரமாக கடைபிடிப்பு: முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகம்
x
தினத்தந்தி 23 Jan 2022 11:49 PM GMT (Updated: 23 Jan 2022 11:49 PM GMT)

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 3-வது வாரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும் முகூர்த்தநாள் என்பதால் சில இடங்களில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 9 மற்றும் 16-ந்தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் இம்மாதத்தில் 3-வது முறையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள், இணைப்பு சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் மூடப்பட்டன. இதனால் தமிழகமே முடங்கியது.

கடைகள் மூடல்

தலைநகர் சென்னையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கையொட்டி காய்கறி-மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள், ஜிம்கள், சலூன்கள், அழகு சாதன நிலையங்கள், ‘டாஸ்மாக்’ கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள், உணவு அங்காடிகள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன. பஸ் - மெட்ரோ ரெயில் சேவைகளும் செயல்படவில்லை.

அதேவேளை ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், பாலகங்கள், ஆம்புலன்சு சேவைகள், அமரர் ஊர்தி சேவைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல செயல்பட்டன.

ஆட்டோ - டாக்சிகள் சேவை

ரெயில் சேவை வழக்கம்போல இயங்கின. இதனால் எம்.ஜி.ஆர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வழக்கமான ரெயில் சேவை இருந்தது. பயணிகளின் வசதிக்காக பஸ்-ரெயில் நிலையங்களில் ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிபந்தனைகளுடன் இயக்கப்பட்டன. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டும் மீண்டும் பிரீபெய்டு ஆட்டோ சேவை இயக்கப்பட்டன.

எல்லாவற்றையும் விட நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வோருக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோ மற்றும் இதர வாகனங்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.

கடற்கரை பகுதிகளிலும்...

அந்தவகையில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வோர், ஆங்காங்கே போலீசாரின் வாகன சோதனையிலும் உரிய அழைப்பிதழை காண்பித்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர். கண்ணில் சிக்குவோர் அனைவரும் அழைப்பிதழை காட்டி செல்வதால் போலீசாரும் முந்தைய ஊரடங்கை போல கண்காணிப்பில் தீவிரம் காட்டவில்லை. இதனால் வழக்கமான வாகன சோதனை நடைபெறும் இடங்களிலும் பெரியளவில் வாகன சோதனை நடைபெறவில்லை. சந்தேகப்படும் வகையில் சாலையில் செல்வோரை மட்டுமே அழைத்து போலீசார் விசாரித்தனர்.

இதுதவிர மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சென்னை போலவே புறநகர் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Next Story