குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2022 6:57 PM GMT (Updated: 2022-01-26T00:27:34+05:30)

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் பி.பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில் முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாசாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும்.

இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்த நிலையில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்து, தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

உத்தரவு உள்ளதா?

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசின் உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

தலையிட முடியாது

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் அதில் தலையிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.


Next Story