சென்னையில் குடியரசு தின விழா: வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு பதக்கங்கள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னையில் குடியரசு தின விழா: வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு பதக்கங்கள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2022 11:03 PM GMT (Updated: 26 Jan 2022 11:03 PM GMT)

தமிழகத்தில் வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கான பதக்கங்களை சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சிகள், தமிழக அரசின் சார்பில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடத்தப்பட்டன. அப்போது இந்த ஆண்டுக்கான வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை உரியவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை அரசு வழங்கி வருகிறது. இந்த பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

அரசு ஊழியர் பிரிவு

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்த பதக்கத்திற்கு அரசு ஊழியர் பிரிவில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதியன்று கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்ட வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த உதயகுமாரை மனிதாபிமானத்துடன் தோள்களில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஓட்டேரி பகுதியில் நிவர் புயல் பாதுகாப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, இடிந்த வீட்டிற்குள் சிக்கி தவித்த கணேஷ் என்ற பெயிண்டரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றியுள்ளார். அந்தப்பகுதியில் காணாமல் போன பழனி என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்த்தார். இந்த வீரதீர செயலுக்காக ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

தீயணைப்பு வீரர், கால்நடை டாக்டர்

அரசு ஊழியர் பிரிவில் விழுப்புரம் மாவட்டம் ஆதியூர் திருவத்தியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்திக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் டி.எடையாரில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை, 24 மணி நேரமாக போராடி காப்பாற்றி கரை சேர்த்தார்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளத்தைச் சேர்ந்த வன கால்நடை உதவி டாக்டர் அசோகன், சின்னத்தடாகம் பகுதியில் காட்டை விட்டு வெளியேறி 7 பேரை கொன்றதுடன், மக்கள் உடைமைக்கு சேதங்களை ஏற்படுத்திய சின்னத்தம்பி என்ற காட்டு யானையை குழு அமைத்து பெரும் போராட்டத்திற்கு இடையே தொடர்ந்து கண்காணித்து மயக்க மருந்து செலுத்தி பிடித்து, ஆனைமலை டாப்சிலிப்பில் கொண்டு விட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் யானையின் அருகே சென்று மயக்க மருந்து செலுத்தி அதை பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அது தற்போது பயிற்சி பெற்று நல்ல நிலையில் உள்ளது.

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் 3 பேரையும், கேரள எல்லையில் 2 பேரையும் கொன்று விளை நிலங்களுக்கு சேதம் விளைவித்த சங்கர் என்ற யானையை பரண் அமைத்து இரவு பகலாக கண்காணித்து மயக்க மருந்து செலுத்தி பிடித்தார். அங்கிருந்த மற்ற 2 யானைகள், அவர் இருந்த மரத்தை தாக்கிய சூழலில், மயங்கி மலைச்சரிவில் கீழே விழுந்து கிடந்த யானை சங்கரின் காலில் கயிறு கட்டி, மற்ற பணியாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக கொண்டு வந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய அசோகனுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பிரிவு

பொதுமக்கள் பிரிவில், சிவகங்கை மாவட்டம் வைகை வடகரையைச் சேர்ந்த டிரைவர் முத்துக்கிருஷ்ணன் காரில் சென்று கொண்டிருந்தார். மதுரை-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் தடுப்பில் மோதி, மாரநாடு கண்மாய்க்குள் விழுந்த மற்றொரு காரில் இருந்த 2 குழந்தைகள், ஒரு முதியவர் மற்றும் ஒரு தம்பதியினர் என 5 பேரை கால்வாயில் குதித்து காப்பாற்றினார். அதற்காக அண்ணா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தே.துலுக்கம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரனின் மகன் லோகித் 4-ம் வகுப்பு படிக்கிறார். லாரி டிரைவரான பாலகிருஷ்ணனின் மனைவி குணா மற்றும் மகள் லித்திகா ஆகியோர் குளிக்கச் செல்லும்போது அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டனர். அருகில் விளையாடிக் கொண்டிருந்த லோகித், அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு கிணற்றில் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்று லித்திகாவை மட்டும் காப்பாற்றினார். அந்த வீரதீர செயலுக்காக அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சொக்கநாதன், அந்தப் பகுதியைச் சேர்ந்த 6 மாணவிகள் வாய்க்காலில் குளித்து தண்ணீரின் ஆழத்தில் இழுத்து செல்லப்பட்டபோது அவர்களின் கூச்சலை கேட்டு 6 பேரையும் காப்பாற்ற முயன்றார். இதைப் பார்த்த அந்த வழியில் சென்ற சுதா என்ற பேச்சியம்மாள் சேலையை வீசியதைத் தொடர்ந்து, 2 பேரும் சேர்ந்து 5 பேரைக் காப்பாற்றினர். எனவே அவர்கள் 2 பேருக்கும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

சென்னை திருவொற்றியூர் திருவள்ளுவர் குடியிருப்பைச் சேர்ந்த தனியரசு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய குடியிருப்பு இடிந்து விழும் சூழ்நிலையில், அங்கிருந்த குடியிருப்புவாசிகளை எச்சரித்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து காப்பாற்றியதற்காக அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.

கோட்டை அமீர் விருது

கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம், கோவை மாவட்டம் கே.கே.புதூரைச் சேர்ந்த ஜே.முகமது ரபிக்கு வழங்கப்பட்டது. இவர் கோவை பகுதியில் மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவராக இருந்து, ஏழை குடும்பங்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடுவது, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தாருடன் தீபாவளி கொண்டாடுவது, ஏழை இந்து பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது, பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைப்பது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், உடைகள் வழங்குவது உள்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் உதவுகிறார்.

இந்து கோவில்களின் மராமத்துப் பணி, கும்பாபிசேகம், திருவிழா நடத்துவதற்கு பொருளுதவி செய்கிறார். எனவே இதுபோன்ற மத நல்லிணக்கத்திற்காக ஜே.முகமது ரபியை பாராட்டி கோட்டை அமீர் பதக்கம் வழங்கப்படுகிறது.

காந்தியடிகள் பதக்கம்

திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை சேலம் மாவட்டம் பூலாம்பட்டியைச் சேர்ந்த செ.ராமசாமி பெற்றார்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதை, சென்னை வடக்கு மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தெட்சணாமூர்த்தி, வேலூர் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மா.குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பா.சக்தி, திருச்சி மாவட்டம் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ச.சிதம்பரம், காஞ்சீபுரம் மாவட்டம் அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு அசோக் பிரபாகரன் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த 3 போலீஸ் நிலையம்

சிறப்பான பணி, குற்றங்களை குறைத்தல், உடனடி நடவடிக்கை ஆகிய செயல்பாட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு கோப்பையை திருப்பூர் தெற்கு நகர போலீஸ் நிலையம் பெற்றுள்ளது. பரிசுக் கோப்பையை அதன் இன்ஸ்பெக்டர் பிச்சையா பெற்றுக் கொண்டார். 2-ம் பரிசை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினியும், 3-ம் பரிசை மதுரை மாநகரின் இ-3 அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேசும் பெற்றுக்கொண்டனர்.

இந்த விருதை பெறுவதற்காக, உடல்நலக் குறைவால் சிலர் விழாவிற்கு வரவில்லை.

Next Story