சலுகை விலையில் கார்கள் வாங்கி தருவதாக ரூ.2.15 கோடி மோசடி கால்பந்து கிளப் உரிமையாளர் கைது


சலுகை விலையில் கார்கள் வாங்கி தருவதாக ரூ.2.15 கோடி மோசடி கால்பந்து கிளப் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 27 Jan 2022 11:15 PM GMT (Updated: 2022-01-28T04:45:29+05:30)

சலுகை விலையில் கார்கள் வாங்கி தருவதாக கூறி, ரூ.2.15 கோடி சுருட்டிய கால்பந்து கிளப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நவீன் (வயது 31). இவர் சென்னையில் பாரத் பெங்களூரு கால்பந்து கிளப் என்ற அமைப்பை நடத்தி வந்தார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் இவரது கால்பந்து கிளப்பின் அலுவலகம் உள்ளது.

இவர் தனது கிளப்பிற்கு, 30 சதவீதம் குறைந்த விலைக்கு டயோட்டா நிறுவனம் சொகுசு கார்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாகவும், அதே குறைந்த விலைக்கு சொகுசு கார்களை வாங்கித்தர தயார் என்றும் விளம்பரப்படுத்தினார்.

இதை உண்மை என்று நம்பி தனக்கும், தனது நண்பர்களுக்கும் 19 கார்கள் வாங்கித்தர கேட்டு, ரூ.2.15 கோடி நவீனிடம் கொடுத்ததாகவும், ஆனால் கார்கள் வாங்கி தராமல், நவீன் ஏமாற்றி விட்டார் என்றும், ரூ.2.15 கோடி பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் என்றும், குமரவடிவேல் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் மனு கொடுத்தார்.

கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான்விக்டர் மேற்பார்வையில், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புகாரில் சிக்கிய நவீன் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story