அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்திற்கு பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி


அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்திற்கு பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 30 Jan 2022 10:05 AM GMT (Updated: 30 Jan 2022 10:05 AM GMT)

அரியலூர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவியினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். 

பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. 

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் வீட்டிற்கு சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.10 லட்சம் நிதி உதவியினை வழங்கினார். அவருடன் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

இதனையடுத்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜகவின் போரட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. நீதி வேண்டும், நியாயம் வேண்டும். பிஞ்சு குழந்தையின் மரணத்தை வைத்து பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது. மாணவியின் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என்று அவர் கூறினார். 

Next Story