கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின்


கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின்
x

கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என்றும், புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தி.மு.க. உறுப்பினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரத்தில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா (தி.மு.க.) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேச தொடங்கினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, கேள்வி நேரத்தில் இதுபோன்று புகழ்ந்து பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும் கட்சி வரிசையில் இருந்தபோதும் நான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் இதை நான் வலியுறுத்துகிறேன். ஆளும் கட்சியை சேர்ந்த நம்முடைய உறுப்பினர்கள் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள். அதற்காக மட்டும் அதை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து உறுப்பினர் சண்முகையா நேரடியாக கேள்விக்கு வந்தார்.

சுருக்கமாக கேட்க வேண்டும்

இதேபோல், கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ., பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘நேராக கேள்விக்கு வாருங்கள்' என்றார்.

அதற்கு உறுப்பினர், ஒரே ஒரு நிமிஷம், முதல் முறையாக பேசுகிறேன், இனிமேல் இப்படி பேச மாட்டேன் என்று கூறி தனது கேள்வியை கேட்டார்.

இதைத்தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர், ‘உறுப்பினர் இந்த அவையில் முதல் முறையாக பேசுகிறார். பொதுவாக கேள்வி நேரத்தில் இப்படி பேசக்கூடாது. எல்லோருக்கும் அவர்கள் தலைவர்கள் மீது பக்தி உண்டு, அவர்களுக்கு வணக்கம் செலுத்த உரிமை உண்டு. ஆனால் கேள்வி நேரத்தில் இதெல்லாம் குறைக்கப்பட வேண்டும். கேள்வி என்பது ஒருவரியில் சுருக்கமாக கேட்க வேண்டும். உறுப்பினர்கள் இதை பின்பற்ற வேண்டும். அதைபோல் அமைச்சர்களும் சுருக்கமாக பதில் அளிக்க வேண்டும். கேள்வி நேரமே நீண்ட நேரம் என்றால் மானிய கோரிக்கை எப்படி நடத்த முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கேள்வி நேரத்தை முடிக்க வேண்டும்' என்றார்.

Next Story