கவர்னர் பாதுகாப்பு விவகாரம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு


கவர்னர் பாதுகாப்பு விவகாரம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 20 April 2022 11:54 PM GMT (Updated: 2022-04-21T05:24:01+05:30)

கவர்னர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.

சென்னை,

மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்.ரவி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அங்கு வந்த கும்பல் ஒன்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது.

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சித்தலைவர்) :- மயிலாடுதுறையில் கவர்னரின் சுற்றுப்பயணம் குறித்து முன்கூட்டியே போலீஸ் அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் கவர்னருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறி உள்ளனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதை ஏன் தடுக்கவில்லை.

(இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது)

எடப்பாடி பழனிசாமி:- கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாதாரண மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இதைத்தொடர்ந்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் சில கோஷங்களை எழுப்பினர். இதற்கு சபாநாயகர் சட்டசபை லாபியில் நின்று கொண்டு கோஷங்கள் எழுப்புவது தவறு. அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காதீர்கள் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர்.

பா.ஜ.க.

அ.தி.மு.க.வை தொடர்ந்து, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

நயினார் நாகேந்திரன் (பா.ஜ.க.) :- மயிலாடுதுறையில் கவர்னருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படாதது வருந்தத்தக்கது. அவர் செல்லும் வழியில் கருப்புக்கொடி காட்டுவது ஏற்புடையது அல்ல. இதுபோன்று ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு வேறு இடம் ஒதுக்குவது உண்டு. அதுபோன்று ஏன் செய்யவில்லை?.

கவர்னரின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கவனம் செலுத்தாத மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்ய வேண்டும். கவர்னர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜக. வெளிநடப்பு செய்கிறது.

இதனை தொடர்ந்து பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பேட்டி

வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னர் பயணித்த கார் மீது, பாது காப்புக்கு சென்ற அதிகாரி கார் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியும், கையில் வைத்திருந்த கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தது தெரிந்தும் முன்எச்சரிக்கையாக அவர்களை அப்புறப்படுத்தாமல், கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு காவல்துறையே முன்னிருந்து பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது. காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரும்புள்ளி

கவர்னரின் பயணம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் கவர்னரின் பாதுகாப்புக்கு காவல்துறை தகுந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் தமிழக காவல்துறை மேல் விழுந்த ஒரு கரும்புள்ளி ஆகும். ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை தமிழக உளவுத்துறை ஏன் முன் கூட்டியே அறியவில்லை?

போலீசார் எதிரிலேயே கவர்னர் கார் மீது தாக்குதல் நடந்திருப்பது தமிழகத்தில் காவல்துறை செயல் இழந்து இருப்பதையும், உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதையும் காட்டுகிறது. கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சிதைந்து சீர்குலைந்து போனது இச்சம்பவம் மூலமாக வெளிப்படுகிறது.

அரசின் கைப்பாவை

காவல்துறையின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது கவர்னருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் போது உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இன்றைக்கு கவர்னருக்கு ஏற்பட்ட இந்த நிலை மிக வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது. காவல்துறை அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. கவர்னர் மீது நடந்த தாக்குதலை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story