அம்பத்தூர் அருகே மனைவியை கட்டையால் அடித்து கொன்ற வடமாநில வாலிபர் கைது..!
வேறு சில ஆண்களுடன் போனில் பேசியதாக கூறி மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற உத்தரப்பிரதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை, அம்பத்தூரில் உள்ள நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (26). இவரது மனைவி ரஷியா கத்துனா (22). உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆன நிலையில் சென்னை வந்துள்ளனர். ஹரிஷ் பிரம்மா அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இருந்ததாக கூறி அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை நடத்த பரிந்துரைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், ரஷியா கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ஹரிசை கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக ரஷியா வேறு சில ஆண்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்ததாகவும், வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ரஷியா சுயநினைவின்றி இருந்ததால் அவரை மருத்துவமனை அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story