தமிழகத்தில் இருந்து 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச்சந்தைக்கு விற்பனை


தமிழகத்தில் இருந்து 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச்சந்தைக்கு விற்பனை
x
தினத்தந்தி 9 May 2022 8:51 PM GMT (Updated: 9 May 2022 8:51 PM GMT)

‘‘தமிழகத்தில் பற்றாக்குறை நீங்கி உபரியில் மின் உற்பத்தி இருக்கிறது. 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது’’ என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் நேற்று நடந்தது. மின் உற்பத்தி - பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, தலைமை - மேற்பார்வை என்ஜினீயர்கள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின் உற்பத்தி

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவையான 17,563 மெகாவாட் மின்சாரம், கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி எந்தவித மின் தடங்கலும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் நுகர்வோரால் உபயோகப்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு மட்டும் 38.9 கோடி யூனிட்டுகள் ஆகும்.

தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசால் தமிழகத்திற்கு இதுவரை நாள் ஒன்றுக்கு 48 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் வரை நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் நிலக்கரி வேண்டி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக, மத்திய அரசால் தற்போது நாள் ஒன்றிற்கு 57 ஆயிரம் டன் அளவிற்கு நிலக்கரி கிடைக்கப் பெறுகிறது. இது தமிழகத்திற்கு தினந்தோறும் தேவைப்படும் 72 ஆயிரம் டன்னை விட 15 ஆயிரம் டன் குறைவாகும்.

வெளிச்சந்தை விற்பனை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சவால்களை எதிர்கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு நாள்தோறும் தடையில்லா மின்சாரம் வழங்கியதோடு மட்டுமன்றி, கடந்த 1-ந்தேதி 1.44 லட்சம் யூனிட்டுகளையும், 8 மற்றும் 9-ந்தேதிகளில் 4.5 லட்சம் யூனிட்டுகளையும், யூனிட் ஒன்றுக்கு ரூ.12 வீதம் வெளி மாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்றிருக்கிறது. பற்றாக்குறை நீங்கி உபரி எனும் அளவுக்கு மின் உற்பத்தி இருக்கிறது.

மேலும், கூடுதல் சிக்கன நடவடிக்கையாக காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கப்பெறும் மாசில்லா பசுமை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உள்ள மின் உற்பத்தி அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மாலை மற்றும் இரவு நேர உச்சபட்ச மின் தேவையை ஈடுகட்டுவதற்கு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால், உபயோகிக்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்படுவதோடு, குறைந்த செலவில் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த முடியும்

எனவே, தமிழ்நாட்டில் மின்வெட்டு போன்ற மாயத் தோற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story